ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (ஏ.ஏ.) எப்படிச் செயல்படுகிறது
எங்கள் வழியை முழுமையாகப் பின்பற்றியவர்கள் மீண்டும் குடிபோதைக்கு அடிமையாவது அரிது. குணமடையாமல் போனவர்கள் எல்லாம் எங்களுடைய இந்த எளிய செயல் திட்டத்தை முழுமனதோடு பின்பற்ற நினைக்காதவர்கள் அல்லது பின்பற்ற முடியாதவர்கள்தான். பொதுவாக இவர்களெல்லாம் சுபாவத்திலேயே தங்களுக்குத் தானே நேர்மையுடன் நடந்துகொள்ள முடியாதவர்கள். அப்படிப்பட்ட துரதிஷ்டசாலிகளும் இருக்கிறார்கள். அவர்களைக் குறை கூறிப் பயனில்லை. அவர்கள் அந்த மாதிரியாகவே பிறந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது. முழு நேர்மை தேவைப்படுகிற ஒரு முறையான வாழ்க்கைக்கு அவசியமான, கிரகிக்கும் தன்மையையும், வாழ்க்கையின் நெறிமுறைகளை வகுத்துக்கொள்ளும் தன்மையையும் இயற்கையிலேயே பெறத் தவறிவிட்டார்கள். அவர்களுடைய வாய்ப்புகள் சராசரிக்கும் குறைவே. இவர்களில் சிலர் தீவிர மனக்கிளர்ச்சியிலும், மனச்சிதைவிலும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இதில் பலர் இவ்வழிமுறைகளை நேர்மையாக பின்பற்றுவதன் மூலம் நல்வாழ்வு பெறலாம்.
எங்களுடைய அனுபவங்கள் பொதுப்படையாக நாங்கள் எப்படியிருந்தோம், பின் என்ன நேர்ந்தது, நாங்கள் இப்பொழுது எப்படியிருக்கிறோம் என்பதைக் காட்டும். நாங்கள் பெற்ற நல்ல வாழ்க்கையை நீங்களும் பெற விரும்பினால் அதற்காக நீங்கள் எதையும் செய்யத் தயாராக இருத்தல் வேண்டும்.
இவற்றுள் சிலவற்றைக் கண்டு நாங்கள் பின் வாங்கினோம். இதைவிட எளிய, மென்மையான வழியைக் கண்டுபிடிக்கலாம் என நினைத்தோம். ஆனால் முடியவில்லை. ஆகவேதொடக்கத்திலிருந்தே பயமின்றி, முழுமனதோடு பின்வாங்காமல் இருங்கள் என்ற ஆவலில் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம். எங்களில் சிலர் எங்களுடைய பழைய கருத்துக்களை விடாமல் பிடித்துக்கொள்ள முயன்றோம். அதனால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. அவற்றை முற்றிலும் துறந்த போதுதான் பலன் ஏற்பட்டது.
நாம் நினைவில் கொள்ள வேண்டியது நம்முடன் தொடர்புடைய மதுவானது-வஞ்சகமான-திகைப்பூட்டும் சக்தி மிகுந்த ஒன்றாகும். உதவியின்றி அதை வெல்ல முடியாது. ஆனால் மிகுந்த வல்லமை படைத்த ஒருவன் இருக்கிறான் அவன் தான் இறைவன்...
இப்போது “அவரை” நாம் உறுதியாகப் பற்றிக் கொள்ளவோமாக.
அரை குறை முயற்சியால் எங்களுக்கு பலன் கிடைக்கவில்லை. நாங்கள் ஒரு திருப்புமுனைக்கு வந்தாகி விட்டது. நாம் இறைவனுடைய பாதுகாப்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் வேண்டினோம்.
இதோ நாங்கள் பின்பற்றிய வழிமுறைகள்.
குடியிலிருந்து மீள நீங்களும் இந்த வழியைப் பின்பற்றலாம்.
1. மதுவைப் பொறுத்தவரை நாங்கள் சக்தியற்றவர்கள் என ஒப்புக்கொண்டோம். வாழ்க்கையை எங்களால் சரிவர நடத்த முடியவில்லை.
2. எங்களை விட வலிமை பொருந்திய சக்தி எங்களுக்கு மனத்தெளிவை அளிக்கக்கூடும் என்ற நம்பிக்கைக்கு வந்தோம்.
3. நாங்கள் புரிந்துகொண்ட இறைவனின் பொறுப்பில் எங்கள் சித்தத்தையும், வாழ்க்கையையும் ஒப்படைக்க முடிவு செய்தோம்.4. அச்சமின்றி எங்களைப்பற்றிய ஆழ்ந்த குணப்பட்டியல் தயார் செய்தோம்.
4. அச்சமின்றி எங்களைப்பற்றிய ஆழ்ந்த குணப்பட்டியல் தயார் செய்தோம்.
5. இறைவனிடமும், எங்களிடமும், மற்றொருவரிடமும் எங்கள் தவறுகளின் உண்மையான தன்மையை ஒப்புக்கொண்டோம்.
6. இறைவன் எங்களின் இந்த எல்லா குணக் கோளாறுகளையும் அகற்ற நாங்கள் முழுமனதோடு எங்களை தயார் படுத்திக் கொண்டோம்.
7. எங்களுடைய குறைபாடுகளை நீக்கும்படி இறைவனைப் பணிவோடு வேண்டினோம்.
8. நாங்கள் யாருக்கெல்லாம் தீமை செய்தோம் என்ற பட்டியல் தயாரித்து அவற்றுக்குப் பரிகாரம் செய்யத் தயாரானோம்.
9. எங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ தீங்கு விளைவிக்காவண்ணம் கூடுமான வரையில் நேரிடையாகப் பரிகாரம் செய்தோம்.
10. தொடர்ந்து சுய பரிசீலனை செய்தோம். தவறு செய்த போதெல்லாம் உடனடியாக ஒப்புக்கொண்டோம்.
11. பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம் நாங்கள் புரிந்துகொண்ட இறைவனிடம் உள்ளார்ந்த தொடர்பை வளர்த்துக்கொள்ள முயற்சித்தோம். எங்களுக்காக அவன் சித்தம் என்னவென்று அறிந்து கொள்ள மட்டுமே வேண்டி அதை நிறைவேற்றும் சக்தியைக் கோரி பிரார்த்தித்தோம்.
12. இவ்வழிமுறைகளைப் பின்பற்றியதின் பலனாக ஆன்மீக விழிப்பைப் பெற்றோம். இந்த வழிமுறைகளை மற்ற குடிநோயாளிகளுக்கு எடுத்துக்கூற முயற்சித்தோம். இத்தத்துவங்களை எங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கடைப்பிடிக்க முயற்சித்தோம்.
எங்களில் பலர் ‘எவ்வளவு கடினமான முறை இது. இவற்றை எங்களால் பின்பற்ற முடியாது’ என வியந்தோம். துணிவு இழக்காதீர்கள். எங்களில் யாரும் இவ்வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற இயலவில்லை. நாங்கள் துறவிகள்அல்ல ஆன்மீகப் பாதையில் முன்னேற நாங்கள் விரும்புகிறோம் என்பது தான் முக்கியமானது. நாங்கள் ஆன்மீக வளர்ச்சி அடைகின்றோமே தவிர அதில் முழு நிலை அடைந்துவிட்டோம் என்று சொல்லவில்லை.
குடிநோயைப் பற்றிய எங்களது விளக்கங்கள், பகுத்தறிவு வாதி பற்றி எழுதிய அத்தியாயம், மற்றும் எங்களது கசப்பான அனுபவங்கள் இவையெல்லாம் எங்களுக்கு மூன்று முக்கியமான கருத்துக்களைத் தெளிவாக்குகின்றன.
1. நாங்கள் குடிநோயாளிகள், எங்கள் வாழ்க்கையைச் சரிவர நடத்த முடியவில்லை.
2. எந்த ஒரு மனித சக்தியும் எங்களைக் குடிநோயிலிருந்து மீட்க முடியவில்லை என்றே சொல்லவேண்டும்.
3. இறைவனை நாடினால் அவரால் விடுவிக்கமுடியும், விடுப்பார்!
AA வின் பன்னிரண்டு கோட்பாடுகள்
எங்களுடைய ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அனுபவத்திலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டவை.:
1. நமது பொதுநலம்தான் நமக்கு முக்கியமானது. நாம் குணமடைவது நமது ஒற்றுமையைப் பொறுத்திருக்கிறது.
2. நமது குழுவின் நடவடிக்கைகளுக்கு இறைவனே அதிகாரி. அவர் நமது குழுவின் மனசாட்சியின் மூலம் தீர்மானத்தை வெளிப்படுத்துவார் எனக் கருதுகிறோம். நமது தலைவர்கள் உண்மையில் நமது நம்பிக்கை பெற்றத் தொண்டர்கள் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதில்லை.
3. குடிப்பதை நிறுத்தவேண்டும் என்ற விருப்பமே ஏ.ஏ.யில் உறுப்பினராவதற்கு ஒரே தகுதி.
4. ஏ.ஏ.- ஐ மொத்தமாகவோ மற்ற குழுக்களையோ பாதிக்காத விவகாரங்களில் ஒவ்வொரு குழுவும் சுயேட்சையாகச் செயல்படும்.
5. குடிநோயால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு விடிவு உண்டு என்ற செய்தியை எடுத்துச்சொல்வதே ஒவ்வொரு குழுவின் அடிப்படை நோக்கம்.
6. ஏ.ஏ குழுக்கள் தங்கள் ஆதரவு, பணம், பெயர் இவைகளை அதைப்போன்ற சம்பந்தப்பட்ட அமைப்பிற்கோ அல்லது வெளிநிறுவனங்களுக்கோ கொடுத்து உதவக்கூடாது. ஏனெனில் பணம், சொத்து, புகழ் போன்றவை நம்மை நம்முடைய அடிப்படை நோக்கத்திலிருந்து திருப்பி விடலாம்.
7. ஒவ்வொரு குழுவும் வெளி உதவியை மறுத்துத் தன் சொந்த பலத்தாலேயே இயங்கவேண்டும்.
8. ஏ.ஏ. தொழில் அடிப்படையில் செயல்படக்கூடாது. ஆனால் நமது சேவை மையங்கள் சில வேலைகளுக்காகச் சிறப்புப் பணியாளர்களை நியமிக்கலாம்.
9. ஏ.ஏ. ஐக் கட்டுப்பாடு செய்யும் அமைப்பாக நிறுவப்படக் கூடாது. ஆனால் தொண்டு செயல்பவர்களுக்கு மட்டுமேபொறுப்பான சேவை மையம், சேவைக் குழு போன்றவைகளை உருவாக்கலாம்.
10. வெளி விவகாரங்களைப் பற்றி ஏ.ஏ.க்கு அபிப்ராயங்கள் கிடையாது. ஆகையால் பொதுக்கருத்து வேறுபாடுகளில் ஏ.ஏ.யின் பெயரை ஈடுபடுத்தக்கூடாது.
11. நமது பொதுத் தொடர்புக் கொள்கை எடுத்துக்காட்டு மூலம் இருக்க வேண்டுமே தவிர விளம்பரங்களால் அல்ல. பத்திரிகை ரேடியோ, டி.வி, சினிமா போன்றவைகளில் நம்மைத் தனிப்பட்ட முறையில் இன்னாரென்று வெளிப்படுத்தலாகாது.
12. நாம் இன்னாரென்று வெளிப் படுத்தாமலிருப்பதே நமது கோட்பாடுகளின் ஆன்மீக அஸ்திவாரம். இது தனி நபரை விட நமது தத்துவங்கள் தான் முக்கியமென வலியுறுத்துகிறது.